எருக்கலம்பிட்டி முஸ்லிம்கள் வரலாறும் பாரம்பரியங்களும்

கடல் வளமும், நில வளமும் நிரம்பப் பெற்றுள்ள இக்கிராமத்தில் முத்துக்குளித்த்ல், சங்கு குளித்த்ல் தொழில்களோடு மீன்பிடித்தொழிலும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. தென்னை, பனை, மரமுந்திரி வளத்தையும் அவற்றை மையமாகக் கொண்ட பல தொழில் வளத்தையும் இக்கிராமம் கொண்டுள்ளது. இக்கிராமத்தின் ஆரம்பக்குடிகள் அரேபிய வர்தகர்களினதும் தென்னிந்திய முஸ்லிம்களினதும் பரம்பரையைச் சார்த்வர்களாக இருந்து வந்திருப்பதால் இக்கிரமம் மிகவும் அறியப்பட்டதாக இருந்து வந்திருக்கிறது. தென்னிந்தியாவிற்கும் எருக்கலம்பிட்டிக்குமிடையிலான வர்தக தொடர்புகளும், பிற தொடர்புகளும் இருந்து வந்திருக்கின்றன. இக்கிராமத்தில் காலத்திற்க்கு காலம் நடந்தேறி வந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் பல தென்னிந்தியர்களின் வம்சாவழித்தொடர்புகளைக்கூறும் வரலாற்று நூல்களிலும் இடம் பெற்றிருப்பதால் இக்கிராமம் அறியப்பட்டதாக உள்ளது. மார்க்க அறிவைப் பெறுவதற்காக எருககலம்பிட்டி மக்கள் பலர் தென்னிந்தியாவிற்குச் சென்று வந்திருந்தாலும் கீழக்கரை, தொண்டி அதிராம் பட்டினம், பெறிய பட்டினம், அம்மா பட்டினம், பாம்பன பட்டினம், வேதாளை போன்ற தென்னிந்திய முஸ்லிம்களோடு திருமண உறவுகளும் ஏற்பட்டிருந்தாலும் இக்கிராமம் மேலும் அறியப்பட்டதாக இருந்து வந்திருக்கிறது. தென்னிந்தியாவிலிருந்தும், அரேபிய நாட்டிலிருந்தும் மார்க்க அறிஞர்களும், ஆத்ம ஞானிகளும், இறைநேசச் செல்வர்களும் இக்கிராமத்திற்கு வருகை தந்திருக்கின்றனர் அவர்களின் அடக்கஸ்தலங்களான கபுறடிகள் பல இங்கும், சூழவுள்ள பகுதிகளிலும் அமைந்திருப்பதாலும் இக்கிராமத்தின் தொன்மையை நன்கு விளங்க முடிகிறது. இவ்வூர் மக்கள் அயலிலிருந்து முஸ்லிம் கிராமங்களுடனும் கிருஸ்தவ, இந்து சமூகப்பழக்க வழக்கங்கள் பல இக்கிராமத்தின் பழக்கவழக்கங்களோடு பின்னிப்பிணையும் அளவுக்கு அன்னியோன்னியமாகப் பழகி வருகிறார்கள்.

அமைவிடம்

எருககலம்பிட்டிக் கிராமம் மன்னார்தீவின் வடக்கில் ஒரு குடாநாடு போன்று அமைந்துள்ளது. இதன் வடபுறம் பாக்கு நீரிணையின் ஒரு அந்தமாகவும், கிழக்குப் புறம் மன்னார்க் குடாக்கடலின் ஒரு கரையாகவும் அமைந்திருக்கின்றது. தென் புறத்தில் உள்ளாறு அமைந்திருக்கின்றது. இக்கிராமத்தின் மேற்குப் புறம் மன்னார்த்தீவின் எஞ்சிய நிலப்பரப்புடன் தொடர்புடையதாகவுள்ளது. ஏறக்குறைய 4 மைல் நீளமான கடற்கரை இக்கிராமத்தைச் சுற்றிக்கானப்படுகிறது. இக்கிராமத்தின் வடபுறத்தில் தென்னை, பனை ஆகியன செழித்து வளர்கின்றது. கிழக்குப்புறத்திலுள்ள நிலப்பரப்பில் பருத்தி, எள்ளு, குரக்கன், சாமை, வரகு, சோளம் போன்ற தானியங்கள் விளைவிக்கப்பட்டுவந்த புஞ்செய் நிலமாக இருந்து வந்திருக்கின்றது. ஒவ்வாத காலநிலையின் காரணமாக அத்தகைய விவசாய நடவடிக்கைகள் கைவிடப்பட்டமையால் அப்பகுதி உடை மரங்களும், இதர முட்புதர்களும் நிறைந்த காடாக மாறியுள்ளது. சில பகுதியிலிருந்து காடுகள் அழிக்கப்பட்டுத் தென்னைச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

கடல் வழியாக விடத்தல்தீவு, இலுப்பக்கடவை, பலவமுனை, இரணைதீவு, நாச்சிக்குடா, ஆகிய பகுதிகளையும் கச்சத்தீவு, இந்தியாவின் கரையோரப்பட்டினங்களான இராமேஸ்வரம், கீழ்க்கரை, நாகூர், நாகபட்டணம், தொண்டி ஆகிய இடங்களையும் சென்றடையலாம். அரைவறள் வலையத்துள் இக்கிராமம் அமைந்திருப்பதால் டிசம்பர் தொடக்கம் பெப்ரவரி வரையும் வீசும் வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காற்றினால் மழையைப் பெறுகிறது. ஆகவே இக்கிராமத்தின் மழைவீழ்ச்சி மன்னார் மாவட்டத்தின் மழை வீழ்ச்சியான 1250mm. சராசரி வெப்பம் 27.8OC ஐயும் கொண்டுள்ளது

தென்மேல் பருவப்பெயர்ச்சிக்காற்று வீச ஆரம்பிக்கும் மே மாதம் ஆரம்பத்தில் இடியுடன் கூடிய மேற்காவுகை மழையையும் இடைக்கிடையே இக்கிராமம் பெருகிறது. தென்மேல் பருவப்பெயர்ச்சிக்காற்று வறண்ட காற்றாக அதிவேகத்துடன் மே மாதம் தொடக்கம் செப்டம்பர் மாதம் வரை வீசும். இக்கிராமம் உடை மரத்துடன் கூடிய முற்பற்றைக் காட்டையும் ஆவாரை, எரிக்கலை, ஆல, இத்தி, கருக்குவாச்சி, நாவல் போன்ற மரங்களையும் தென்னை, பனை, மரமுந்திரி ஆகிய தாவரங்களையும் கொண்டுள்ளது. கடற்கரையோரங்களில் கன்னா, தாழை, உவரி போன்ற தாவரங்கள் காணப்படுகின்றன. மாடு, ஆடு, எருமை, குதிரை, கழுதை, மான், நரி போன்ற மிருகங்கள் இங்குள்ளன.

ஏறககுறைய ஒரு சதுரமைல் பரப்பளவுள்ள நிலப்பகுதியில் 10000க்கு அதிகமான மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதியாக இக்கிராமம் அமைந்திருப்பதுடன், இது ஒரு தனி முஸ்லிம் கிராமமாக ஆரம்ப காலம் முதல் நிலைத்து வந்திருக்கிறது. எருக்கலம்பிட்டிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் தாராக்குண்டு, புதுக்குடியிருப்பு, கரிசல் ஆகிய கிராமங்களும் முஸ்லிம் கிராமங்களாகவே இருந்து வந்திருக்கின்றன.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்குப் பொதுவாகவும் இலங்கைவாழ் முஸ்லிம்கள். அனைவருக்கும் தனிப்பெரும் சொத்தாகவும் 1944ல் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியொன்று அமைக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அக்கல்லூரியில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியாலும் அவ்வாண்டு அக்கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கான மகா வித்தியாலயத்தின் அளப்பரிய சேவையாலும் எண்ணிறந்த முஸ்லிம், கிறிஸ்தவ, இந்து மக்களுக்கும் இன, மத பேதமின்றிக் கல்வி அளிக்கப்பட்டது.

அதனால் பலரும் பல்வேறுபட்ட பதவிகளில் இலங்கையில் பரவலாகச் சேவையாற்றி வருவதோடு பலர் வெளிநாடுகளிலும் சேவையாற்றி வருகின்றனர். இத்தகைய காரணங்களால் எருக்கலம்பிட்டி என்ற இக்கிராமமும் அதன் அமைவிடமும் துல்லியமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.

[http://www.erukkalampiddy.com/en/history/mannar/introduction.html?showall=1]